திருச்சியில், மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, உதவி செயற்பொறியாளர்- வணிக ஆய்வாளர் கைது


திருச்சியில், மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, உதவி செயற்பொறியாளர்- வணிக ஆய்வாளர் கைது
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர், வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1½ லட்சம் சிக்கியது.

பொன்மலைப்பட்டி, 

திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் குமார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிட ஒப்பந்த தொழில் செய்து வருகிறார். குமார் திருவெறும்பூர் அருகே பூலாங்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கோரி அரியமங்கலத்தில் இயங்கி வரும் மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். புதிதாக மின் இணைப்பு வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என வணிக பிரிவு ஆய்வாளர் வீர சரவண பெருமாள் (வயது 46), உதவி செயற்பொறியாளர் பாலசந்தர் (40) ஆகியோர் கேட்டுள்ளனர்.

ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என அவர் கூறினார். ரூ.20 ஆயிரம் கொடுக்குமாறு அவர்கள் கேட்டனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளில் ரசாயன பவுடர் தடவி, ரூ.20 ஆயிரத்தை அதிகாரிகளிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர்.

அதன்படி குமார் நேற்று காலை அரியமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குமார், லஞ்ச பணத்தை வணிக பிரிவு ஆய்வாளர் வீர சரவண பெருமாளிடம் கொடுத்தார்.

அதனை வாங்கி உதவி செயற்பொறியாளர் பாலசந்தரிடம் அவர் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று வீர சரவண பெருமாள், பாலசந்தர் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1½ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

மேலும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின. தொடர்ந்து பாலசந்தர், வீர சரவண பெருமாள் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் பாய்லர் ஆலை, திருவெறும்பூரில் அமைந்துள்ள 2 பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி அதிகாரிகள் 2 பேர் கைதான சம்பவம் மின்சார வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story