கோவில் விழாவில் இரு தரப்பினர் மோதல்: பிள்ளையார்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதற்றம்; போலீஸ் குவிப்பு


கோவில் விழாவில் இரு தரப்பினர் மோதல்: பிள்ளையார்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதற்றம்; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 8 March 2019 10:45 PM GMT (Updated: 8 March 2019 9:52 PM GMT)

கோவில் விழாவில் காங்கிரஸ்- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து பிள்ளையார்குப்பம் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.இதையொட்டி அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பாகூர்,

புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பேட் அங்காளம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலு, என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் லட்சுமிகாந்தன் ஆகியோரும் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் அவரை வழிமறித்து ஏன் இங்கு வந்தீர்கள், உங்களை அழைத்தது யார்? என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் திடீரென ராஜவேலுவை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ராஜவேலுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்து என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் அங்கு கூடினர். இதேபோல் எதிர் தரப்பை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு ஒன்று சேர்ந்தனர். இதனால் இருதரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்து கிருமாம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் மோதல் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் ராஜவேலுவை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் கிருமாம்பாக்கத்தில் புதுவை-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ராஜவேலுவின் ஆதரவாளரான பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த தண்டபாணி போலீசில் புகார் கொடுத்தார். அதே பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் (வயது 35) என்ற வாலிபர், முன்னாள் அமைச்சர் ராஜவேலுவை ஆபாசமா திட்டி, மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார், சிவபிரகாஷை கைது செய்தனர். இந்த மோதல் காரணமாக பிள்ளையார்குப்பம் பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக பதற்றம் நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மயான கொள்ளை திருவிழா நடந்தது.

Next Story