பிரதமர் மோடி அப்பட்டமான பொய்யர் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு


பிரதமர் மோடி அப்பட்டமான பொய்யர் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 March 2019 4:45 AM IST (Updated: 9 March 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி அப்பட்டமான பொய்யர் என்று முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

பிரதமர் மோடி அப்பட்டமான பொய்யர் என்று முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டினார்.

14 மாடிகள்

கர்நாடக வீட்டு வசதித்துறை சார்பில் பெங்களூருவில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. அந்த திட்டத்தின்படி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பெங்களூரு பேட்ராயனபுராவில் உள்ள குதிரேகெரே கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

“பெங்களூருவில் சொந்த வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி கொடுப்பது தான் அரசின் நோக்கம். இந்த திட்டத்தில் தரைத்தளத்தில் இருந்து 14 மாடிகள் கட்டப்படுகின்றன. இதில் ஒரு வீட்டுக்கு ரூ.8 லட்சம் வரை செலவு ஆகும்.

ரூ.11 ஆயிரம் கோடி

முதல்கட்டமாக 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. அடுத்தடுத்த கட்டிடங்களில் மொத்தம 2 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்துள்ளோம். பெங்களூருவின் வளர்ச்சிக்கு கூட்டணி அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

பெங்களூருவை மாதிரி நகரமாக மாற்ற மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் மோடி குறைத்து பேசு கிறார். இந்த கடன் தள்ளுபடி திட்டத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

2 லட்சம் விவசாயிகள்

இதில் 14 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் முதுகில் குத்தும் பணியை மத்திய அரசு செய்கிறது.

விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்திற்கு விவசாயிகளின் விவரங்களை மத்திய அரசு கேட்டது. நாங்கள் இதுவரை 2 லட்சம் விவசாயிகளின் விவரங்களை கொடுத்துள்ளோம். ஆனால் வெறும் 14 விவசாயிகளுக்கு மட்டும் நிதி உதவி கிடைத்து உள்ளது.

அப்பட்டமான பொய்யர்

பிரதமர் மோடி ஒரு அப்பட்டமான பொய்யர். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ரூ.2,000 கோடி பாக்கி வைத்து உள்ளது. அந்த தொகையை விடுவிக்குமாறு நாங்கள் பலமுறை கேட்டுவிட்டோம். இதுவரை அந்த நிதியை விடுவிக்கவில்லை.”

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story