தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் நிகில் குமாரசாமியை அவதூறாக பேசுவது வேதனையாக இருக்கிறது மைசூருவில் நடிகை சுமலதா அம்பரீஷ் பேட்டி


தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் நிகில் குமாரசாமியை அவதூறாக பேசுவது வேதனையாக இருக்கிறது மைசூருவில் நடிகை சுமலதா அம்பரீஷ் பேட்டி
x
தினத்தந்தி 9 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும், நிகில் குமாரசாமியை அவதூறாக பேசுவது வேதனையாக இருக்கிறது என்றும் மைசூருவில் நடிகை சுமலதா அம்பரீஷ் தெரிவித்தார்.

மைசூரு, 

தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றும், நிகில் குமாரசாமியை அவதூறாக பேசுவது வேதனையாக இருக்கிறது என்றும் மைசூருவில் நடிகை சுமலதா அம்பரீஷ் தெரிவித்தார்.

நடிகை சுமலதா அம்பரீஷ்

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா அம்பரீஷ் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அவர் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது. அதாவது அந்த தொகுதியை கூட்டணி கட்சியான ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளது. அங்கு முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி களமிறங்க இருக்கிறார்.

இதனால் நடிகை சுமலதா மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மண்டியா மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் மண்டியாவில் அம்பரீசுக்கு சொந்தமான வீட்டில் நடிகை சுமலதா தனது மகன் அபிஷேக்குடன் குடியேறியுள்ளார். அங்கிருந்தபடியே அவர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.

ஆதரவாளர்கள் மோதல்

இதற்கிடைேய மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமிக்கு ஆதரவாக ஜனதாதளம் (எஸ்) கட்சியினரும், நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக அம்பரீசின் ஆதரவாளர்களும், சில காங்கிரஸ் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இரு தரப்பினரும் சமூகவலைத்தளத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரின் மீது தனிப்பட விமர்சனங்களை இரு தரப்பினரும் கூறி வருகிறார்கள். இது கர்நாடக அரசியல் களத்தில் அனலை கக்கி வருகிறது.

சாமுண்டீஸ்வரி கோவிலில் தரிசனம்

இந்த நிலையில் நடிகை சுமலதா நேற்று மைசூரு மாவட்டம் சாமுண்டிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

அதையடுத்து அவர் மண்டியாவுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக நடிகை சுமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காத்திருப்பேன்

நான் மண்டியா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டுள்ளேன். இதுவரை காங்கிரஸ் சார்பில் எந்த முடிவும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் நான் கடைசி வரை காத்திருப்பேன். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

நான் டிக்கெட் கேட்டு எந்த கட்சியினரையும் சந்திக்கவில்லை. தற்போது அரசியல் களத்தில் ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையாக எடுத்துவைக்கிறேன். சமூகவலைத்தளங்களில் சில அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இதை தடுக்க முடியாது. ஆனால் யாரும், யாரையும் வேதனைப்படும் வகையில் பேச வேண்டாம். அதுபோல் தனிப்பட்ட விமர்சனங்கள் தடுக்கப்பட வேண்டும். இன்று (அதாவது நேற்று) உலக மகளிர் தினமாகும். இந்த உலகில் தாயை விட பெரியது எதுவும் இல்லை.

எனக்கு வேதனையாக இருக்கிறது

எனவே தாயை வேதனைப்படுத்தும் வகையில் எந்த பேச்சும், பேச வேண்டாம். யாரையும் விமர்சிக்கவும் வேண்டாம். நானும் ஒரு தாய். எனது மகனை யாராவது அவதூறாக பேசினால் எனக்கு வேதனையாக இருக்கும். அதுபோல் நிகில் குமாரசாமியை அவதூறாக பேசுவது அவரது தாய்க்கு வேதனையாக இருக்கும். அவரை விமர்சிப்பது எனக்கும் வேதனையாக இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

மண்டியா மக்கள், என்னை தங்களது மருமகள் போல் கவனித்துக்கொள்கிறார்கள். இதுவரை நான் மக்களை தேர்தல் நோக்கத்துடன் சந்திக்கவில்லை. நான் இருக்கும் இடத்திற்கே மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் நான் சந்தோஷமாக உள்ளேன். சாமுண்டீஸ்வரி தாயை தரிசனம் செய்ததால், தற்போது எனது மனசுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story