மானாமதுரை பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க வைகை ஆற்றுப்படுகையில் நீர் உறிஞ்சு தளம் அமைக்க பூமிபூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மானாமதுரை பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்க அங்குள்ள வைகை ஆற்றில் தண்ணீர் தேக்கும் தளம் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
மானாமதுரை,
மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் நிலத்தடி நீரை நீண்ட காலத்திற்கு உயர்த்த நீர் உறிஞ்சு தளம் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. இதனை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் தொடர் மணல் திருட்டால் நிலத்தடி நீர் மட்டம் சரிந்ததுடன், சுற்றுவட்டார கிராம விவசாய கிணறுகளிலும் தண்ணீர் இன்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழையில்லாததாலும், வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லாததாலும், ஆற்றங்கரையோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கவும், கிணறுகளில் நிலத்தடி நீரை உயர்த்தவும், பொதுப்பணித்துறை சார்பில் மானாமதுரை பகுதிகளான முத்தனேந்தல், கல்குறிச்சி வைகை ஆற்றுப்படுகையில் ரூ.59 லட்ச ரூபாய் செலவில் நீர் உறிஞ்சு தளம் அமைக்கப்படுகிறது.
இந்த உறிஞ்சு தளம் 245 மீட்டர் நீளத்திலும், 8 மீட்டர் அகலத்திலும் 5 மீட்டர் ஆழத்திலும், சுமார் 2 லட்சம் மணல் மூட்டைகள் கொண்ட செயற்கை மணல் அடுக்கு அமைக்கப்பட்டு, அதன் மேல் மணல் கொண்டு மூடப்படும், வைகை ஆற்றில் நீர் வரத்து காலங்களில் இந்த செயற்கை மணல் அடுக்கில் தண்ணீர் நீண்ட காலத்திற்கு தேங்கி நிற்கும். ஆற்றின் மேற்பரப்பில் தண்ணீர் தேங்கும் போது வெயில்காலங்களில் ஆவியாகிவிடும்.
ஆனால், மணற்பரப்பிற்கு கீழே தேங்கும் தண்ணீர் ஆவியாகாது, இந்த முறை மூலம் நீர் உறிஞ்சு தளம் வைகை ஆற்றில் திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல், கால்பிரிவு ஆகிய 3 இடங்களில் அமைக்கப்படுகிறது. முத்தனேந்தல் வைகை ஆற்றுப்படுகையில் இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன், பொதுப்பணித்துறை மாவட்ட செயற்பொறியாளர் வெங்கட்ராகவன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜி போஸ், இளையான்குடி ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் உள்பட விழாவில் பங்கேற்றனர்.