சி.கே.மங்கலத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
சி.கே. மங்கலத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி,
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் சார்பில் பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3,000–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சி.கே.மங்கலத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை 100 சதவீதம் முழுமையாக வழங்க வேண்டும், இழப்பீட்டு தொகை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது போன்ற விவரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சேக் அப்துல்லா, வேளாண்மை இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த 2017–18–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். இதற்கான பணி தொடங்கியுள்ளது. வருகிற 15–ந்தேதிக்குள் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவதாகவும், 15–ந்தேதிக்குள் தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி விவசாயிகள் கலைந்து சென்றனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நேற்று திருவாடானை, சி.கே.மங்கலம் ஆகிய ஊர்களில் கடையடைப்பு நடைபெற்றது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னோசியஸ், திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், ஒன்றிய செயலாளர் ரெத்தினமூர்த்தி, சோழந்தூர் பாலகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தீனதயாளன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜயகதிரவன், வடக்கு ஒன்றிய செயலாளர் பதனக்குடி ரவி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர்கள் பாலசுப்பிரமணியன், முருகானந்தம், மரிய அருள், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆதியூர் தம்பிராஜ், கோடனூர் ராஜா, திருவெற்றியூர் கவாஸ்கர், தளிர்மருங்கூர் வெற்றிவேல், மாவூர் இளங்கோ, வேலாவயல் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.