திருவெறும்பூர் அருகே, மண் கடத்த முயன்ற 4 பேர் கைது, 10 வாகனங்கள் பறிமுதல் - அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு வலைவீச்சு
திருவெறும்பூர் அருகே மண் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர்,
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பட்டவெளி பகுதியில் இருந்து குளத்து வாரியில் சவுடு மண் அள்ளி கடத்தப்படுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு சிலர் மண் அள்ளி டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர்.
பின்னர், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம், ஒரு டிப்பர் லாரி மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் என 10 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும், இது சம்பந்தமாக காந்தலூர் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. செயலாளர் தங்கமணி மற்றும் பட்டவெளி ஆறுமுகம், பூலான்குடியை சேர்ந்த சிவா, சங்கர், செந்தில், பாலசுப்ரமணியன் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களில் பாலசுப்பிரமணியன், செந்தில், சிவா, சங்கர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற அ.தி.மு.க.செயலாளர் தங்கமணி உள்பட 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story