தஞ்சையில், ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் - சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரிக்கை


தஞ்சையில், ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் - சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 9 March 2019 5:05 AM IST (Updated: 9 March 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்து, பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் ரூ.200 வீதம் 20 ஆண்டுகள் பணம் கட்டினால் அதற்கு பின் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் என்ற மத்தியஅரசின் மோசடி திட்டத்தை கைவிட வேண்டும்.

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். 60 வயதான அனைவருக்கும் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பணி நியமனம் என்ற கொத்தடிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். முதலாளித்துவத்துக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை சிதைக்கும் செயலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், துணைத் தலைவர்கள் அன்பழகன், சாமிக்கண்ணு, பரிமளா, துணைச் செயலாளர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story