கலசபாக்கம் அருகே மரத்தில் மினி லாரி மோதி 3 பேர் சாவு பசு மாடும் பலியான பரிதாபம்


கலசபாக்கம் அருகே மரத்தில் மினி லாரி மோதி 3 பேர் சாவு பசு மாடும் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 10 March 2019 4:15 AM IST (Updated: 9 March 2019 9:11 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே மரத்தில் மினிலாரி மோதி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பசுமாடும் பலியானது.

கலசபாக்கம், 

திருவண்ணாமலையை அடுத்த காட்டுமலையனூர் பகுதியை சேர்ந்த சேவி (வயது 70). இவரது மனைவி ரகம்மாள் என்ற காவியம்மாள் (65). உறவினர்கள் குமார் (40), முருகன் (50), ஞானசேகரன் (35) ஆகியோர் நேற்று போளூர் அருகில் கேளூர் மாட்டு சந்தைக்கு கறவை மாடு வாங்குவதற்காக மினி லாரியை சென்றனர்.

மினிலாரியை அதே பகுதியை சேர்ந்த பிரவீன்ராஜ் (29) என்பவர் ஓட்டினார். அவர்கள் மாட்டு சந்தைக்கு சென்று சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்பில் உள்ள சினையாக இருந்த பசுமாட்டை வாங்கினர். பின்னர் அவர்கள் அதை மினி லாரியில் ஏற்றி கொண்டு கலசபாக்கம் வழியாக காட்டுமலையனூர் சென்று கொண்டிருந்தனர்.

கலசபாக்கம் அருகே கொண்டம் காரியந்தலில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தனர். மினிலாரியில் நிறுத்தப்பட்டு இருந்த பசுமாட்டை அவர்கள் சரியாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

அப்போது மினிலாரியின் அருகில் சென்ற வாகனம் ஒன்று தடை செய்யப்பட்ட ‘ஹாரன்’ சத்தத்தை எழுப்பியுள்ளது. அதனால் பயந்த போன பசுமாடு மினிலாரிக்குள் துள்ளி குதித்தது. இதனால் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது.

இதில் படுகாயம் அடைந்து சேவி, ஞானசேகரன், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மினி லாரியில் இருந்த பசு மாடும் உயிரிழந்தது. டிரைவர் பிரவீன்ராஜ், காவியம்மாள், குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

பின்னர் உயிரிழந்த சேவி, ஞானசேகரன், முருகன் ஆகியோரின் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய மினி லாரியை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story