மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.3½ கோடியில் புதிய கட்டிடம்


மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.3½ கோடியில் புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 4:32 PM GMT)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.3½ கோடியில் புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

பத்மநாபபுரம்,

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு சொந்த கட்டிடம் வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சொந்த கட்டிடம் கட்ட முளகுமூடு அருகே கோழிப்போர்விளையில் இடம் தேர்வு செய்யப்பட்டு  புதிய கட்டிடத் துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.  

நிகழ்ச்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

விழாவில், குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரின்ஸ், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) பழனிசாமி, செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண் தங்கம், மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் நீலா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இதுவரை சொந்த கட்டிடம் இல்லாமல் இயங்கி வந்தது. தமிழக அரசின் ஆணையின்படி, கோழிப்போர்விளையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.3.58 கோடி மதிப்பில் இரண்டு தளங்களுடன் கூடிய புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் களியக்காவிளை பஸ் நிலையத்தை நவீன முறையில் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியது. இந்த பணி தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், களியக்காவிளை பஸ் நிலையம் 20 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதையொட்டி 90 சென்ட் நிலத்தில் காய்கறி, மீன்சந்தை செயல்பட்டு வருகிறது. பஸ் நிலைய விரிவாக்கத்துக்காக காய்கறி சந்தையில் இருந்து 40 சென்ட் இடம் சேர்க்கப்பட உள்ளது என்றார்.

தொடர்ந்து, காய்கறி, மீன்சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் தளவாய் சுந்தரம் காய்கறி சந்தையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், கலெக்டர் கூறும்போது. சந்தையில் வியாபாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், சணல்குமார், உதவி பொறியாளர் ஜெயக்குமார், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், அ.தி.மு.க. குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், மேல்புறம் ஒன்றிய செயலாளர் ஆல்பர்ட்சிங், கட்சி நிர்வாகிகள் சிவகுற்றாலம், சலாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செண்பகராமன்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ண குமார், ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மதுசூதனன் வரவேற்று பேசினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், 20 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய், சேய் நல பெட்டகத்தை வழங்கினார். விழாவில், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், சுகாதாரபணி உதவி இயக்குனர் சுந்தரவேல் விழி, வட்டார மருத்துவ அலுவலர் ராஜ் குமார், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பியூலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story