கல்லட்டி மலைப்பாதையில் பழுதான டயர்களுடன் இயக்கப்படும் அரசு பஸ்கள் பயணிகள் பீதி
கல்லட்டி மலைப்பாதையில் பழுதான டயர்களுடன் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பீதியடைகின்றனர்.
மசினகுடி,
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்து, பல்வேறு இடங்களுக்கு சென்று திரும்புகின்றனர். மலைப்பாதையில் அனுபவம் வாய்ந்த டிரைவர்களால் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சில பஸ்கள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. குறிப்பாக பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் பழுதாகி மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கின்றன. இதனால் நடுவழியில் டயர் பஞ்சராகி பயணிகள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலேயே மிகவும் அபாயகரமான சாலை என்று அறிவிக்கப்பட்டு உள்ள கல்லட்டி மலைப்பாதையில் இயக்கப்படும் அரசு பஸ்களிலும் பழுதான டயர்களே பயன்படுத்தப்படுகிறது. மசினகுடி, மாயார், சிங்காரா, சிறியூர், ஏக்குணி போன்ற இடங்களுக்கு ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதையில் இயக்கப்படும் மினி அரசு பஸ்களில் 1 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய டயர்களை பயன்படுத்துவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் பழுதான டயர்களுடன் இயக்கப்படும் பஸ்களை டிரைவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஓட்டுகின்றனர். மேலும் விபத்து நிகழ்ந்துவிடுமோ? என்று பயணிகள் பீதியில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, மலைப்பாதையில் பழுதான டயர்களை கொண்டு பஸ்களை இயக்குகின்றனர். அவ்வாறு இயக்கும்போது சில நேரங்களில் டயர்களில் மேற்புறம் உள்ள ரப்பர் தனித்தனியாக பிரிந்து வருகிறது. இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தரமான டயர்களை பயன்படுத்த வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story