வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கோவையில் என்ஜினீயரிங் பட்டதாரிகளிடம் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார்


வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கோவையில் என்ஜினீயரிங் பட்டதாரிகளிடம் மோசடி போலீஸ் கமிஷனரிடம் புகார்
x
தினத்தந்தி 10 March 2019 4:00 AM IST (Updated: 9 March 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி, கோவையில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட பலரிடம் பணம் மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

கோவை,

கோவையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை நகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை ராம்நகர், நாகப்பா வீதியில் குளோப் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களை சேர்ந்த ரிஷிசிங், ஹர்ஷ், ரமேஷ் பன்சால் ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தினர், கனடா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் தகவல் வெளியிட்டு இருந்தனர்.

இதை நம்பி நாங்கள் தலா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் நிறு வனத்தினர் கூறியபடி வேலை வாங்கி தர வில்லை. இது குறித்து நாங்கள் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித் தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுவனத்தை மூடி விட்டு நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். மேலும் அவர்கள், 40-க்கும் மேலானவர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து வைத்துள்ளனர். 90 பேரிடம் ரூ.30 லட்சம் அளவுக்கு மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

எனவே எங்களை ஏமாற்றிய நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டு ஆகியவற்றை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார். மேலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில், அந்த நிறுவன அலுவலகத்தை திறந்து பாஸ்போர்ட்டுகளை எடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கவும் கமிஷனர் அறிவுறுத்தினார்.

வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை இழந்து தவிக்கும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் கூறும்போது, நியூசிலாந்து மற்றும் கனடா நாடுகளில் 30 நாட்களுக்குள் வேலை கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் அந்த நாடுகளில் குறுகிய காலத்தில் வேலை கிடைக்காது என்பதை நாங்கள் பின்னர்தான் விசாரித்து தெரிந்துகொண்டோம். பணத்தை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story