நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்கள் போட்டியிடும் அய்யாக்கண்ணு பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்கள் போட்டியிடும் அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்கள் போட்டியிடும் என்று திருச்சியில் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சியில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க அலுவலகத்தில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கூட்டியக்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்க தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் நிலைப்பாடு, நிறைவேற்றப்படாத விவசாயிகளின் கோரிக்கைகள், அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது. இதில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்க பொதுச்செயலாளர் ராமகவுண்டர், பொருளாளர் சேரன், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பூபாலன், பிரேம்குமார், ஜான் மெல்கியோராஜ், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்ட முடிவில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:–

விவசாயிகளின் பிரதான கோரிக்கையான விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கவும், அதுவரை விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயது நிறைவடைந்த விவசாயிக்கு மகன் இருந்தாலும் சரி, மகள் இருந்தாலும் சரி அல்லது நிலம் இருந்தாலும் சரி, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தனிநபர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் விவசாயிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கும் கட்சிகளுக்கு எதிராக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுவோம். மேலும் அனைத்து விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கூடி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது என்றும் முடிவெடுத்துள்ளோம். அடுத்த வாரம் மீண்டும் விவசாயிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளோம். அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்றும் முடிவெடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story