கடையம் அருகே வங்கிக்கடன் வாங்கி தருவதாக சலூன் கடைக்காரரிடம் பண மோசடி 4 பேர் கைது


கடையம் அருகே வங்கிக்கடன் வாங்கி தருவதாக சலூன் கடைக்காரரிடம் பண மோசடி 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2019 4:00 AM IST (Updated: 9 March 2019 11:32 PM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே வங்கிக்கடன் வாங்கி தருவதாக சலூன் கடைக்காரரிடம் பண மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடையம், 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே சிவசைலத்தை அடுத்துள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் கருப்பசாமி (வயது 44). இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரிடம், வடமலைபட்டியை சேர்ந்த பரமசிவம் மகன் ஜெயபிரதிஷ்குமார் (23), கோவிலூற்று காமராஜர் தெருவை சேர்ந்த ராஜவேல்சாமி மகன் சிவசந்திரன் (28), விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள அருணாசலபுரத்தை சேர்ந்த பாஸ்கர் (55), கீழக்கடையத்தை சேர்ந்த தங்கமணி மகன் லட்சுமணன் (32) ஆகியோர், எங்களுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தால் வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி தருகிறோம் என கூறியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பிய கருப்பசாமி முதல் தவணையாக ரூ.3,500 கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், பல மாதங்களான பிறகும் கடன் வாங்கி தரவில்லை. இதனால் நேற்று முன்தினம் கருப்பசாமி, அவர்களை சந்தித்து மீதமுள்ள 1,500 ரூபாயையும் கொடுத்து, எனக்கு சீக்கிரம் கடன் வாங்கி தாருங்கள். இல்லையென்றால் நான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயபிரதிஷ்குமார், சிவசந்திரன், பாஸ்கர், லட்சுமணன் ஆகியோர் கருப்பசாமியை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கருப்பசாமி, இதுபற்றி கடையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஜெயபிரதிஷ்குமார் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story