வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலி
நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
நெல்லை,
நெல்லை பேட்டை செந்தமிழ் நகரை சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 60). இவர், நெல்லை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரம் எழுதி கொடுக்கும் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக பேட்டையில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக நெல்லையை அடுத்த திருத்து பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வள்ளிநாயகம் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளிநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவருடைய மனைவி யமுனா (44). இவர்களுடைய மகன் மகாராஜன் (21). இவர் விஜயநாராயணத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக மகாராஜன் தனது தாய் யமுனாவை, மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மூன்றடைப்பு அருகே உள்ள பானான்குளம் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக யமுனா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story