மாவட்டத்தில், இன்று 1.72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 951 மையங்களில் வழங்கப்படுகிறது


மாவட்டத்தில், இன்று 1.72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 951 மையங்களில் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) 951 மையங்களில் 1.72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி, 

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளம்பிள்ளைவாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்கள் 10 ஒன்றியங்களில் 888 மையங்களிலும், 2 நகராட்சி பகுதியில் 63 மையங்களிலும் என மொத்தம் 951 மையங்களில் வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாமல் வேறு இடங்களிலிருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக இந்த மாவட்டத்தில் வந்து தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு நடமாடும் முகாம்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து 951 மையங்களிலும் தயார் நிலையில் உள்ளது. 56 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 நகர் நல மையங்கள் மற்றும் 6 அரசு மருத்துவமனைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 2 லட்சத்து 32 ஆயிரத்து 900 டோஸ் வழங்கப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்துகளை பாதுகாக்க உரிய குளிர்பதன பெட்டிகள் அனைத்து மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்தினை மையங்களுக்கு வினியோகம் செய்வதற்காக மாவட்ட கலெக்டரால் ஆணையிடப்பட்ட பிற துறை வாகனங்கள் 36 மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாகனங்கள் 53 உட்பட 89 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. போலியோ சொட்டு மருந்து 5 வயது குழந்தைகளுக்கு வழங்கிட சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 3,804 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story