புதுடெல்லியில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் 2 டிரைவர்கள் கைது
புதுடெல்லியில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 டிரைவர்களை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் மூலம் எரிசாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 35 லிட்டர் அளவு கொண்ட 530 கேன்களின் 18 ஆயிரத்து 550 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. விசாரணையில் அந்த எரிசாராயம் புதுடெல்லியில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
வடமாநிலங்களில் இருந்து எரிசாராயம் தமிழகத்திற்கு கும்மிடிப்பூண்டி வழியாக கடந்த காலங்களில் கடத்தி வரப்பட்டது. அந்த பகுதியில் தொடர் சோதனையால் கடத்தல் தடுக்கப்பட்டதால் தற்போது பெங்களூரு வழியாக எடுத்து வந்துள்ளார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக லாரி மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 46), வெங்கடேசன் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story