நசரத்பேட்டை அருகே கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை–மகன் தலை நசுங்கி சாவு
மொபட்டின் கைப்பிடியில் கன்டெய்னர் லாரி உரசியதால் சாலையில் விழுந்த தந்தை–மகன் இருவரும் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், பழஞ்சூர், அன்னை சத்யா தெருவைச் சேர்ந்தவர் ஏசு(வயது 53). அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மகன் சாமுவேல்(21). பி.டெக் படித்துவிட்டு, வேலை தேடி வந்தார்.
ஏசுவின் மகளுக்கு திருமணமாகி, கணவருடன் பூந்தமல்லியில் வசித்து வருகிறார். நேற்று மாலை தனது மகள் வீட்டுக்கு அரிசி மூட்டையை கொண்டு செல்வதற்காக ஏசு தனது மகன் சாமுவேலுடன் மொபட்டில் சென்றார்.
மொபட்டை சாமுவேல் ஓட்டினார். அரிசி மூட்டையுடன் அவருக்கு பின்னால் ஏசு அமர்ந்து இருந்தார். பூந்தமல்லி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் சென்ற மொபட்டின் கைப்பிடியில் உரசியது.
இதில் நிலை தடுமாறி தந்தை–மகன் இருவரும் மொபட்டில் இருந்து சாலையில் விழுந்தனர். அவர்கள் மீது கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ஏசு, சாமுவேல் இருவரும் அதே இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
விபத்து நடந்த உடன் கன்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான தந்தை–மகன் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கன்டெய்னர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் தந்தை–மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.