பழவேற்காடு ஏரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்படும் பாலீகிட்ஸ் புழுக்கள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை


பழவேற்காடு ஏரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்படும் பாலீகிட்ஸ் புழுக்கள் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 March 2019 10:15 PM GMT (Updated: 9 March 2019 7:17 PM GMT)

பழவேற்காடு ஏரியில் இருந்து பாலீகிட்ஸ் புழுக்களை பிடித்து ஆந்திராவுக்கு கடத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரி உள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் கடலோடு இணைந்த பகுதியாக இது விளங்குகிறது.

இந்த ஏரியில் கொசஸ்தலை ஆறு, ஆரணி ஆறு சொர்ணமுகி ஆறு, காலாங்கி ஆறுகளின் வடிகால் பகுதியாகவும் விளங்குகிறது.

இந்த ஏரியை சுற்றி அலையாத்தி மரங்கள் காணப்படுகிறது. பழவேற்காடு ஏரியில் வெளிநாடுகளில் இருந்து 100–க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்து தாய்நாட்டிற்கு திரும்புகிறது.

இந்த ஏரியில் 160 வகையான மீன்களும், 25 வகையான மிதவை புழுக்கள், பலவகையான மெல்லுடலிகள் இறால், நண்டு வகைகள், ஆழி, மட்டி, ஊர்வன ஆமைகள், கடல் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஏரியை நம்பி 40–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேலான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலும், ஏரியும் கலக்கும் இடமான முகத்துவாரப்பகுதி வழியாக கடல் உயிரினங்கள் ஏரிக்கு வரும் நிலையில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்க உதவி புரிந்து வந்தது.

மேலும் பழவேற்காடு ஏரியில் பாலீகிட்ஸ் எனப்படும் புழுக்கள் அதிக அளவில் மண்ணுக்கு அடியில் வாழ்ந்து வருவதால் இதனை மீன் இனங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் உணவாக உண்கிறது. இதனால் மீன் வளம் பெருகுவதுடன் சுவையுடனும் இருக்கும். இந்த நிலையில் பழவேற்காடு ஏரி கடலில் கலக்கும் இடமாக திகழும் முகத்துவாரம் மணல்மேடு ஆனதால் கடல்நீர் எரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைப்பட்டது.

இதனால் பழவேற்காடு ஏரி வறண்டு விடும் சூழ்நிலை உருவானது. ஆங்காங்கே மணல் திட்டுகள் வெளியே தெரிந்து காய்ந்து கிடக்கிறது. இந்த பகுதியில் சமூக விரோதிகள் புகுந்து மீனவர்களின் நண்பனாக கருதப்படும் பாலீகிட்ஸ் புழுக்களை பிடித்து ஆந்திராவுக்கு கடத்தி செல்கின்றனர். இந்த ஏரியில் பிடிக்கும் புழுக்களை குறைந்த விலைக்கு வாங்கி லட்சக்கணக்கில் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

இயற்கையான உணவாக பயன்படும் பாலீகிட்ஸ் புழுக்களை பிடிப்பதை தடுக்க வனத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, கடலோர காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழவேற்காடு மீனவர்களின் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story