அ.தி.மு.க.-பா.ஜனதா வலுவான கூட்டணி: “எங்களுக்குள் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம்” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


அ.தி.மு.க.-பா.ஜனதா வலுவான கூட்டணி: “எங்களுக்குள் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம்” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 9 March 2019 10:30 PM GMT (Updated: 9 March 2019 7:38 PM GMT)

“அ.தி.மு.க.-பா.ஜனதா வலுவான கூட்டணியாக உள்ளது. எங்களுக்குள் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம்” என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி-பசுவந்தனை ரோடு சந்திப்பு, தட்சிணாமூர்த்தி கோவில் தெரு ஆகிய இடங்களில் பா.ஜனதா கட்சி கொடியேற்று விழா நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த பிரமாண்ட கூட்டணியை பார்த்து தி.மு.க. கூட்டணியினர் மிரண்டு போய் உள்ளனர். தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கி கொண்டிருக்கிறது. மாம்பழம் கனிந்து கொண்டிருக்கிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர் கூட்டணியினர் பதற்றத்தில் உள்ளனர். ஆனால் நாம் நேர்மறையான அரசியலை செய்வோம். மத்திய அரசு நாடு முழுவதும் 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தந்துள்ளது. ஏழை தொழிலாளர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் வழங்குவதை தடுக்க முயன்ற தி.மு.க.வுக்கு மன்னிப்பே கிடையாது.

தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் இந்திய தமிழர்களையும் காப்பாற்றவில்லை, இலங்கை தமிழர்களையும் காப்பாற்றவில்லை. தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டை முற்றுகையிட சென்ற ஒரு கட்சிக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் அவர், தமிழகத்துக்கு நன்மை தரும் திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுகிறார்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்தபோது, சென்னை-மதுரை இரட்டை ரெயில் பாதை திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் தற்போது கோரிக்கை வைத்தவுடனே அந்தியோதயா ரெயில், கோவில்பட்டியில் நின்று செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு அந்தியோதயா ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் ஜப்பானில் இருப்பதாக கருதுகிறார். அதனால்தான் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்துக்கு அறிவித்த திட்டங்களை அவர் உணரவில்லை.

கயத்தாறு துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் போன்றவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அத்தனை தீவிரவாதிகளையும் ஒழித்து கட்டியவர் பிரதமர் நரேந்திரமோடி. அதனால்தான் நமது நாடு பாதுகாப்பாக உள்ளது. எனவே மத்தியில் தாமரை மலர்ந்து, தமிழகத்தில் இரட்டை இலை வளம்பெற வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க.-பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் பலம் சேர்ப்போம். எங்களுக்குள் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம். பிரதமர் நரேந்திர மோடி ஒரு தந்தையை போன்று நாட்டை வழிநடத்தி வருகிறார். விருதுநகரில் காமராஜரை தோற்கடித்த தி.மு.க, தற்போது காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 1,900-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு விடுவித்து உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இலங்கை தமிழர்களை கொன்று குவித்ததற்கு உடந்தையாக தி.மு.க.-காங்கிரசுடன் வைகோ கூட்டணி அமைத்துள்ளார். இது ஏற்புடையதுதானா?

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

முன்னதாக, அவர் கயத்தாறு அருகே சவலாப்பேரிக்கு சென்று, வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Next Story