அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 7:39 PM GMT)

அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்தியூர்,

அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையம் அருகே உள்ள பகுதி குப்பநாயக்கன்கரடு. இங்கு 80–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அந்த பகுதியில் மேல் நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் நடைபெற்று வந்தது. இதற்காக அங்கு ஒரு ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தியூர் பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. எனினும் அவர்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பலரும் ஒன்று திரண்டு அந்தியூர்– வெள்ளித்திருப்பூர் ரோட்டுக்கு நேற்று காலை 9 மணி அளவில் வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி குமாரி, ஊராட்சி செயலாளர் சந்திரசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘ஒரு நாள் விட்டு ஒரு நாள் எங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ளவர்கள் எல்லாரும் கூலித்தொழிலாளர்கள். லாரி எப்போது வருகிறது என காத்திருந்து குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் எங்களால் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் லாரி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. எனவே எங்களுக்கு புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில், ‘இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story