ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதல்: 2 பேர் உடல் நசுங்கி பலி விழுப்புரத்தில் பரிதாபம்


ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதல்: 2 பேர் உடல் நசுங்கி பலி விழுப்புரத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 10 March 2019 4:15 AM IST (Updated: 10 March 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள அய்யூர்அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் மகன் சண்முகம் (வயது 36). இவரும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் வேலு(45), ஜெயராமன் மகன் ரகோத்தமன் (26) ஆகியோரும் நண்பர்கள் ஆவர்.

இவர்களில் சண்முகம் விழுப்புரம் நகரில் ஆட்டோ ஓட்டி வந்தார். வேலு விவசாயமும், ரகோத்தமன் சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் வேலையும் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகம், சவாரியை முடித்துக்கொண்டு அய்யூர்அகரத்திற்கு தனது ஆட்டோவில் புறப்பட்டார். அவருடன் வேலுவும், ரகோத்தமனும் வீட்டிற்கு புறப்பட்டனர்.

இரவு 11.30 மணியளவில் விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை அருகில் இவர்களது ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள புறவழிச்சாலையில் இருந்து அய்யூர்அகரம் செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச்சென்ற தனியார் ஆம்னி பஸ், கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ மீது மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் ஆட்டோ டிரைவர் சண்முகம் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேலுவும், ரகோத்தமனும் ஆட்டோவின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேலு இறந்தார்.

தொடர்ந்து, ரகோத்தமனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து சண்முகம் மற்றும் வேலு ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பஸ் டிரைவரான திண்டுக்கல் கம்பளியான்பட்டு பகுதியை சேர்ந்த அழகர்சாமி (46) என்பவரை கைது செய்தனர். ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவத்தினால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related Tags :
Next Story