அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சி தலைவர் முயற்சி தோல்வியில் முடியும்


அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சி தலைவர் முயற்சி தோல்வியில் முடியும்
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 10 March 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சி தலைவர் முயற்சி தோல்வியில் முடியும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து பா.ஜனதா சார்பில் முதியவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முதியவர்களுடன் கலந்துரையாடினார். இதில் கர்நாடக மாநில எம்.எல்.ஏ. சி.டி. ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து முதியவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பா.ஜனதா ஆட்சியில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கி பேசினார்.

முன்னதாக அவருக்கு முதியவர்கள் நினைவு பரிசு வழங்கினர்.

மத்திய மந்திரி பேட்டி

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

குமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்னென்ன பணிகள் செய்து இருக்கிறேன் என்பது பற்றி ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்டர்கள் போன்ற பல தரப்பட்ட மக்களை சந்தித்து விளக்கி வருகிறேன். தற்போது வயதில் பெரியவர்களுடன் இதுகுறித்து கலந்து பேசி உள்ளேன். அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சி தலைவர் முயற்சி தோல்வியிலேயே முடியும். நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் சேருவார்கள். தே.மு.தி.க. விவகாரத்தில் இழுபறி நிலை ஏற்பட்டாலும் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.

தி.மு.க.வை முன்பு தாக்கி பேசிய வைகோ, தற்போது தி.மு.க.வை தாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் எங்களுக்கு பல எதிர்ப்புகள் வரும், ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். பிரதமர் மோடியின் மீது தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு செல்வாக்கு உயர்ந்து உள்ளது. குமரியில் ரூ.40 ஆயிரம் கோடி திட்டத்தை பற்றி குறை கூறும் நாங்குநேரி மண்ணில் இருக்கும் ஒருவருக்கு, குமரி மண்ணை பற்றி என்ன தெரியும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story