குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதல்: விபத்தை ஏற்படுத்திய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை புதுப்பேட்டை அருகே விபரீதம்


குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதல்: விபத்தை ஏற்படுத்திய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை புதுப்பேட்டை அருகே விபரீதம்
x
தினத்தந்தி 10 March 2019 5:15 AM IST (Updated: 10 March 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் விபத்தை ஏற்படுத்திய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே உள்ள ஒறையூர் காலனியை சேர்ந்தவர் வேலு மகன் கதிர் (வயது 17). இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து ஒறையூருக்கு வந்திருந்தார். பின்னர் தனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில், வாணியம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.

அப்போது, சாலையோரம் விளையாடி கொண்டிருந்த விழுப்புரம் மாவட்டம், மரகதபுரத்தை சேர்ந்த ராமராஜ் மகள் கனிஷ்கா(3) என்கிற குழந்தை மீது எதிர்பாராத விதமாக கதிர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் காயமடைந்த, குழந்தை கனிஷ்காவை உறவினர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கதிரை குழந்தையின் உறவினர்கள் பிடித்து வைத்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளை அவர்கள் வைத்துக்கொண்டு, உங்களது ஊரில் இருந்து பெரியவர்களை அழைத்து வருமாறு அவரிடம் தெரிவித்தனர். தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நண்பனுடையது என்பதாலும், விபத்தில் காயமடைந்த சிறுமியின் நிலைமையை நினைத்தும் பயத்திலேயே அங்கிருந்து சென்றார்.

அப்போது, நல்லூர்பாளையம் அருகே சென்ற அவர், அங்கு கருமகாரிய கொட்டகை அருகில் உள்ள ஆலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து கதிரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கதிரின் பெற்றோர், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அவர்களிடம் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story