திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலை மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்புவனம்,
மதுரையில்–ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக மதுரை ரிங் ரோட்டில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதில் தரை வழியாக சாலைகள் அமைக்கும் பணி தற்போது முடிவு பெறும் நிலையில் உள்ளது. ஆனால் இந்த சாலை வழியாக உள்ள அதிக அளவு ரெயில்வே பாதைகள் உள்ளன. அதில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி தான் மிகவும் தாமதமாகி வருகின்றன.
மேலும் பாலம் கட்டும் போது பாலத்தின் கீழ் இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் இணைப்பு சாலைகள் வழியாக தான் நகருக்குள் செல்ல முடியும். உதாரணமாக திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலத்தின் வலதுபுறம் திருப்புவனம் நகருக்குள் செல்லும் இணைப்பு சாலை செல்கிறது. இதன் மூலம் மதுரையில் இருந்து வரும் நகர் மற்றும் புறநகர் பஸ்கள் திருப்புவனத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லகின்றன.
இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணி முடியாததால், வாகனங்கள் திருப்புவனம்–புல்வாய்க்கரை சாலை சந்திப்புக்கு வந்து ரெயில்வே கேட் வழியாக திருப்புவனம் நகருக்கு சென்று விட்டு இடது புறமாக திரும்பி மதுரைக்கு செல்கின்றன. இந்த சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடும் போது, வாகன நெரிசலால் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் திருப்புவனத்தில் இருந்து மணலூர், சிலைமான், எஸ்.புளியங்குளம் வழியாக மதுரை ரிங் ரோடு செல்ல சுமார் அரை மணி நேரம் ஆகும். ஏனெனில் இந்த சாலை மிகவும் குறுகலாகவும், ஊருக்குள் செல்வதாலும் காலதாமதம் ஏற்பட்டது.
சில இடங்களில் அந்த சாலையில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் நிலை இருந்தது. தற்போது மணலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் போக்குவரத்திற்கு திறந்து விட்டதால் பயண நேரம் மிச்சமாக உள்ளது. எனவே திருப்புவனம் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என்று திருப்புவனம் பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.