மது குடிக்க பணம் தராததால் தாயை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த மகன் கைது
கமுதி அருகே மது குடிக்க பணம் தராததால் அரிவாளால் வெட்டி தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கமுதி,
கமுதி அருகே கோவிலாங்குளம் போலீஸ் சரகம் காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து(வயது 53). விவசாயி. இவருடைய மனைவி முத்துப்பேச்சி(47). இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் 5 பேருக்கு திருமணம் முடிந்துவிட்டது.
இவர்களது மகன்களில் குருசாமி (35) என்பவர் திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் குடிபழக்கத்தக்கு ஆளான குருசாமி மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்வாராம்.
வழக்கம்போல குருசாமி மது அருந்த பணம் கேட்டு முத்துப்பேச்சியை தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குருசாமி அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முத்துப்பேச்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் மேற்பார்வையில் கோவிலாங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்–இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பேச்சியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் தாயை வெட்டி கொலைசெய்து விட்டு அந்த பகுதியில் பதுங்கி இருந்த குருசாமியை பிடித்து கைது செய்தனர்.