ஊழல் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது ரபேல் முறைகேட்டில் பிரதமருக்கு நேரடி தொடர்பு சித்தராமையா பேட்டி
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
உப்பள்ளி,
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
உப்பள்ளியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமருக்கு நேரடி தொடர்பு
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணையில் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முதலில் சில ஆவணங்கள் திருட்டு போனதாக கூறி இருந்தார். தற்போது ஆவணங்கள் திருட்டு போகவில்லை என்று அவரே சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வெளிப்படையாக கூற முடியாது என்று சொல்லி இருந்தனர். அப்படிப்பட்ட பாதுகாப்பு ஆவணங்கள் திருட்டு போய் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் எதை நம்ப வேண்டும் என்று தெரியவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து பொய் மட்டுமே சொல்லி வருகிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் தினமும் ஒவ்வொரு கருத்துகளை மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதன் மூலம் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது உண்மை என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதும் உண்மை. பிரதமர் சம்பந்தப்பட்டு இருந்தால் கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இருக்க முடியுமா?.
அரசியல் செய்யக்கூடாது
நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில மக்களின் எண்ணத்தை அறிந்து இப்படி சொல்கிறேன். பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருப்பதால், கர்நாடகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். எடியூரப்பாவே இதை சொல்லி இருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்பு விஷயத்திலும், ராணுவ வீரர்கள் விவகாரத்திலும் யாரும் அரசியல் செய்யக்கூடாது. நமது ராணுவம் மீது காங்கிரஸ் கட்சிக்கும் அதீத நம்பிக்கை இருக்கிறது. கொப்பல், பாகல்கோட்டையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும் என்னை வற்புறுத்தவில்லை. நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் விரும்பவில்லை.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story