கல்வீசி மோதலில் ஈடுபட்ட தாகூர் கல்லூரி மாணவர்கள் 21 பேர் மீது வழக்கு
கல்வீசி மோதலில் ஈடுபட்ட தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் 21 பேர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதையொட்டி கோஷ்டிகளாக பிரிந்து மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கி கொண்டனர்.
இதில் கல்லூரி பேராசிரியர் சம்பத்குமார் மீது கல் விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதைத்தொடர்ந்து கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் இளங்கோவிடம் புகார் மனுவும் அளித்தனர். இதேபோல் மாணவர்களின் ஒரு பிரிவினரும் புகார் அளித்தனர். கல்லூரியில் மாணவர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொண்டது குறித்து லாஸ்பேட்டை போலீசில் கல்லூரி முதல்வர் இளங்கோ புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் லாஸ்பேட்டை போலீசார் கல்லூரி மாணவர்கள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், பொருட்களை சேதப்படுத்துதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்பட ஜாமீனில் வரமுடியாத 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.