ஷீனாபோரா கொலை வழக்கு பீட்டர் முகர்ஜி “சைலண்ட் கில்லர்” சி.பி.ஐ. குற்றச்சாட்டு


ஷீனாபோரா கொலை வழக்கு பீட்டர் முகர்ஜி “சைலண்ட் கில்லர்” சி.பி.ஐ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 March 2019 5:00 AM IST (Updated: 10 March 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

ஷீனாபோரா கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜி ‘சைலண்ட் கில்லராக’ செயல்பட்டார் என சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது.

மும்பை, 

ஷீனாபோரா கொலை வழக்கில் பீட்டர் முகர்ஜி ‘சைலண்ட் கில்லராக’ செயல்பட்டார் என சி.பி.ஐ. குற்றம் சாட்டி உள்ளது.

மகள் கொலை

தனியார் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகி இந்திராணியின் முதல் கணவருக்கு பிறந்த ஷீனா போரா(வயது25) கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணி, அவரது கார் டிரைவர் ஷியாம்வர் ராய், இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா கைது செய்யப்பட்டனர். பின்னர் தொலைக்காட்சி நிர்வாகியும், இந்திராணியின் 3-வது கணவருமான பீட்டர் முகர்ஜியும் கைதானார்.

பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்த கொலை வழக்கு மும்பையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஜாமீன் மனு

இந்தநிலையில் பீட்டர் முகர்ஜி ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் 3-வது முறையாக மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜக்தாலே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், பீட்டர் முகர்ஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

இது குறித்து அவர் வாதிடுகையில், “மாயமாகி இருந்த ஷீனா போராவை கண்டுபிடிக்க பீட்டர் முகர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பீட்டர் முகர்ஜிக்கு தெரிந்தே அனைத்தும் நடந்துள்ளது. ராகுல் முகர்ஜி பலமுறை கேட்டும் ஷீனா போராவை கண்டுபிடிக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஷீனாபோரா கொல்லப்பட்டதில் “சைலண்ட் கில்லராகவே” பீட்டர் முகர்ஜி இருந்துள்ளார். எனவே அவர் விடுதலை செய்யப்பட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

லண்டனில் இருந்தார்

இது குறித்து பீட்டர் முகர்ஜி தரப்பில் ஆஜரான வக்கீல், கொலை நடந்த சமயத்தில் பீட்டர் முகர்ஜி லண்டனில் இருந்ததாகவும், அவருக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது என வாதாடினார்.

இதற்கு சி.பி.ஐ. தரப்பு வக்கீல், “மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தாக்குதல் நடந்தபோது பாகிஸ்தானில் இருந்தார். அதற்காக அவருக்கு சம்பவத்தில் தொடர்பில்லை என சொல்லமுடியாது” என தெரிவித்தார்.


Next Story