தேனியில் பயங்கரம்: சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் கொலை?


தேனியில் பயங்கரம்: சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர் கொலை?
x
தினத்தந்தி 9 March 2019 11:45 PM GMT (Updated: 9 March 2019 11:26 PM GMT)

தேனியில் சென்னையை சேர்ந்த போலீஸ்காரர், உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது.

தேனி,

தேனியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் கால்களில் கல் கட்டப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த போலீஸ்காரர், உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் திட்டச்சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் ஒரு கிணறு உள்ளது. 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றுக்குள் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, கிணற்றுக்குள் ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது.

பின்னர் தேனி தீயணைப்பு நிலையத்துக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், தீயணைப்பு படை வீரர்கள், கிணற்றுக்குள் கிடந்த பிணத்தை கயிறு கட்டி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த உடலின் இரு கால்களும் கயிற்றால் கட்டப்பட்டு, அதில் ஒரு கருங்கல்லும் இருந்தது.

பிணமாக கிடந்தவர் ஜீன்ஸ் பேண்ட், கருப்பு நிற சட்டை அணிந்து இருந்தார். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் முகத்தை வைத்து அவர் யார்? என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே அப்பகுதியில் போலீசார் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிணற்று பகுதியில் உள்ள மோட்டார் அறைக்கு மேல் பகுதியில் ஒரு பை கிடந்தது.

அந்த பையை போலீசார் சோதனையிட்ட போது, அதற்குள் ஓட்டுனர் உரிமம், ஆதார் அடையாள அட்டை, சம்பள விவர பட்டியல் மற்றும் ஆடைகள் இருந்தன. அவற்றை வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெரும்மன்சேரியை சேர்ந்த பந்தன் மகன் ராமர் (வயது 26) என்பது தெரியவந்தது.

தற்போது அவர், சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது. பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

யாரேனும் அவரை கொலை செய்து விட்டு, காலில் கல்லை கட்டி கிணற்றுக்குள் வீசிச் சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவர் தனக்குத்தானே கால்களில் கல்லை கட்டி கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இறந்தவர் ராமர் என்று தெரியவந்துள்ளது. இவர், கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்துள்ளார். பட்டாலியன் படைப்பிரிவில் பணியாற்றி, பின்னர், ஆயுதப்படை பிரிவுக்கு மாறுதல் பெற்றுள்ளார். தற்போது சென்னை மவுண்ட் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 7-ந்தேதியில் இருந்து வருகிற 12-ந்தேதி வரை விடுமுறை பெற்றுள்ளார்.

கடந்த 6-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் சொந்த ஊருக்கு செல்லவில்லை. அவருடைய உறவினர் கேரள மாநிலம் மூணாறில் வசிக்கிறார். இதனால், மூணாறு செல்வதற்காக தேனிக்கு வந்திருக்கலாம். கொலையா? தற்கொலையா? என்பது பிரேத பரிசோதனையில் தெரியவரும். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை’ என்றார். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story