காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து மணமகளின் அண்ணன் பலி 24 பேர் படுகாயம்
காவேரிப்பாக்கம் அருகே டயர் வெடித்ததால் வேன் கவிழ்ந்து மணமகளின் அண்ணன் பரிதாபமாக இறந்தார். 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
பனப்பாக்கம்,
நெமிலியை அடுத்த அசநெல்லிகுப்பத்தை சேர்ந்தவர் நித்யானந்தம் (வயது 50), இவரது மனைவி பரிமளா. இவர்களின் மகன் லோகேஷ் (25), மகள் மகேஸ்வரி (20). லோகேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் மகேஸ்வரிக்கும், ஆற்காடு அருகே உள்ள தென்நந்தியாலத்தை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஆற்காடு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அசநெல்லிகுப்பத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு வேனில் உறவினர்கள் வந்தனர்.
திருமணம் முடிந்தவுடன் நேற்று காலை 10 மணிக்கு உறவினர்கள் மற்றும் அசநெல்லிகுப்பத்தை சேர்ந்த 25 பேரை அசநெல்லிக்குப்பத்துக்கு வேனில் லோகேஷ் அழைத்து சென்றார்.
காவேரிப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வேனின் இடதுபுற டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையின் நடுவில் இருந்த தடுப்புகம்பியில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லோகேஷ், காமாட்சி, ஜெயந்தி, இளங்கோ, அனிதா, மங்கை, பத்மா, அஞ்சலி, திருஞானம், லலிதா, பார்வதி உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த 8 பேர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமகளின் அண்ணன் விபத்தில் பலியான சம்பவத்தால் மகிழ்ச்சியா இருக்க வேண்டிய திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.