சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் சாவு கணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சேலம் அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் திடீரென உயிரிழந்தார். மேலும் அவரது கணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் அருகே சித்தர்கோவில் முருங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மணிமேகலை (வயது40). மணிமேகலைக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் மருத்துவ செலவுக்கு பல லட்சம் ரூபாய் தேவைப்பட்டது.
இதற்காக முத்துசாமி, அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் தனக்கு சொந்தமான நிலத்தை கொடுத்து கிரயம் செய்து வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் வாங்கினார்.
இந்நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து மணிமேகலை வீடு திரும்பினார். பின்னர், ரூ.10 லட்சத்தை முத்துசாமி எடுத்துக் கொண்டு அ.தி.மு.க. பிரமுகரிடம் கொடுத்து, தான் அடமானம் வைத்த நிலத்தை தன்னுடைய பெயருக்கு திருப்பி கிரயம் எழுதி கொடுக்குமாறு கேட்டார்.
அப்போது அ.தி.மு.க. பிரமுகர், நிலத்தை தனது பெயரில் பட்டா வாங்கி விட்டதாகவும், நிலத்தை திருப்பி தர முடியாது என்றும் கூறினார். இதை கேட்டு முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அவர், இதுபற்றி தனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறினார். இதன் காரணமாக மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மணிமேகலை நேற்று காலை திடீரென உயிரிழந்தார். அ.தி.மு.க. பிரமுகர் நிலத்தை திரும்ப கொடுக்க மறுத்ததுடன், கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்ததால் தான் மணிமேகலை இறந்துவிட்டார் என அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும், மணிமேகலையின் உடலை கட்டிலோடு எடுத்து வந்து சித்தர்கோவில் மெயின்ரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, அ.தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே, போலீஸ் அதிகாரிகள், கலெக்டர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய முத்துசாமி, திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் உடனே அவரை தடுத்து நிறுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில் மறியலை அவர்கள் கைவிட்டு மணிமேகலையின் உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.