2½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து 1,705 மையங்களில் வழங்கப்பட்டது
நெல்லை மாவட்டத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 392 குழந்தைகளுக்கு போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து 1,705 மையங்களில் வழங்கப்பட்டது.
நெல்லை,
போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதற்காக நெல்லை மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் 1,705 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், இடம் பெயர்ந்து வாழும் கட்டிட தொழிலாளர்கள் குழந்தைகள், செங்கல் சூளைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் புறவழிச்சாலை, சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.
நெல்லை தச்சநல்லூர் ஆரம்பர சுகாதார மையத்தில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, ஒரு குழந்தைக்கு போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள தாய் சேய் நல பெட்டகம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
நெல்லை மருத்துவ பணிகளின் துணை இயக்குனர் செந்தில்குமார், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் கண்ணன், டாக்டர்கள் பிரதாப் சந்திரன், ஐஸ்டின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து பல்வேறு முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மருத்துவத்துறையை சார்ந்த 1,200 பணியாளர்கள், செவிலியர்கள், சத்துணவு பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 446 பேர் முகாமில் பணியாற்றினர். மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 392 குழந்தைகளுக்கு போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story