நம்பியூர் அருகே, முதியவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
நம்பியூர் அருகே முதியவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நம்பியூர்,
நம்பியூர் சாமன்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 61). இவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஜெயராஜின் உடலை புதைப்பதற்காக அவருடைய உறவினர்கள் நம்பியூர் அருகே எலத்தூர் அ கிராமத்தில் உள்ள பொது மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பொது மயானத்துக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்தவர்களிடம் வெளியூரை சேர்ந்தவர்களின் உடலை இங்கு புதைக்கக்கூடாது என்று கூறியதோடு, ஜெயராஜின் உடலையும் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
மேலும் ஜெயராஜின் உறவினர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் தாசில்தார் உமா மகேஸ்வரன் மற்றும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து ஜெயராஜின் உடல் கோபியில் உள்ள ஒரு மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story