‘விஜயுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்’ நடிகர் அருண்விஜய் பேட்டி
‘விஜயுடன் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்று நடிகர் அருண்விஜய் கூறினார்.
நெல்லை,
நடிகர் அருண்விஜய் நடித்த தடம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக தன்யாஹோப், ஸ்மிருதி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்த அருண் விஜய் மற்றும் பட குழுவினர் இந்த திரைப்படம் ஓடும் திரையரங்களுக்கு நேரில் சென்று வருகிறார்கள் .
நெல்லையில் ராம் தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டு உள்ளது. நேற்று காலையில் முதல் காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது நடிகர் அருண்விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி, நடிகைகள் தன்யாஹோப், ஸ்மிருதி ஆகியோர் வந்தனர். அவர்களை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
ரசிகர்கள் மத்தியில் அருண்விஜய் பேசியதாவது:-
தடம் திரைப்படம் எனது வாழ்க்கையில் ஒரு மைல் கல். இந்த படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டர்களில் நேரிடையாக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். ரசிகர்களும் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இந்த படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ரசிகர்கள் உற்சாகப்படுத்தினால் தான் என்னால் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடியும்.
மலைமலை, மாஞ்சாவேலு உள்ளிட்ட திரைப்படங்கள் வணிகரீதியில் பெரிய அளவில் வெற்றியை தந்தது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. வாய்ப்பு கிடைத்தால் அஜித்துடனும், விஜயுடனும் நடிக்க தயாராக இருக்கிறேன்.
தற்போது அக்னி சிறகுகள், பாக்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட் மூலம் பல திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது. அப்படி இருந்தும் நல்ல படங்களை ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று பார்த்து வருகிறார்கள். நானும், மகிழ்திருமேனியும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அருண்விஜயுடன், ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். முன்னதாக தியேட்டருக்கு வந்த அருண்விஜய் மற்றும் படக்குழுவினருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள் ராமசாமி ராஜா, முத்துராம், வினியோகஸ்தர்கள் மணிகண்டன், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story