3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - திண்டிவனத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
3¼ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் தொடங்கி வைத்தார்.
திண்டிவனம்,
தமிழகம் முழுவதும் நேற்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 2,476 மையங்களில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 818 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
திண்டிவனம் திருப்புலிசாமி அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் இது பற்றி மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் ஆணைக்கிணங்க இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. மொத்தம் 2,476 மையங்களில் 5 ஆயிரத்து 113 பணியாளர்கள் மூலம் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 818 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது.
விடுபட்டவர்களுக்கு 2 நாட்கள் வீடு, வீடாக சென்று அலுவலர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்குவார்கள். இந்த பணியை மேற்பார்வையிட மாவட்ட அளவில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த பணிகளில் நடமாடும் குழுக்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சக்கரபாணி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையாளர் ஸ்ரீபிரகாஷ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள் பாலுசாமி, ஜெமினி, திண்டிவனம் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், துப்புரவு அலுவலர் லிப்டன்சேகர், மாவட்ட தாய்-சேய் நல அலுவலர்கள் சசிகலா, கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story