மின் பாதையை சீரமைக்க அதிகாரி லஞ்சம் வாங்கினாரா? அதிகாரிகள் விசாரணை


மின் பாதையை சீரமைக்க அதிகாரி லஞ்சம் வாங்கினாரா? அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2019 3:45 AM IST (Updated: 11 March 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

மின்பாதையை சீரமைக்க விவசாயியிடம் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ‘வீடியோ’ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரத்தநாடு,

கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலால் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்கு ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததில் விவசாயிகள் பேரிழப்பை சந்தித்தனர்.

விவசாய நிலங்களில் உள்ள மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கும் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. பல இடங்களில் விவசாய பாசனத்துக்கான மின்பாதைகள் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதன் காரணமாக விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். புயலில் பாதிக்கப்பட்ட மின்பாதையை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மின்பாதையை சீரமைப்பதற்கு ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த விவசாயியிடம், அதிகாரி ஒருவர் லஞ்சம் பெறுவது போன்ற ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் விவசாயி, அங்கு பணியில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் தனது விவசாய மின் இணைப்புக்கான மின்பாதையை சொந்த செலவில் சீரமைத்து கொள்ளப்போவதாக கூறுகிறார். மேலும் அதற்குரிய மின் உபகரணங்களை தருமாறு கேட்கிறார். இதைத்தொடர்ந்து அதிகாரிக்கும், விவசாயிக்கும் இடையே உரையாடல் நடக்கிறது. உரையாடலின்போது அந்த அதிகாரி கையில் பணத்தை வைத்துக்கொண்டு விவசாயிடம் பின்னர் வந்து மின் உபகரண பொருட்களை பெற்றுக்கொள்ளும்படி கூறுகிறார்.

இந்த ‘வீடியோ’ சமூக வலை தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்வாரிய உயர் அதிகாரிகள், மின்பாதையை சீரமைக்க விவசாயியிடம் அதிகாரி லஞ்சம் பெற்றாரா? என்பது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story