திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,263 வழக்குகளுக்கு தீர்வு


திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,263 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 March 2019 3:45 AM IST (Updated: 11 March 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,263 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதி மன்றம் நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தொடங்கி வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

வழக்குகளில் சமரச தீர்வு என்பது தற்போது மக்களிடையே அதிகரித்து வருகிறது. விரைவாக வழக்குகளை முடித்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வழக்குகளில் தீர்வு பெற்றவர்கள் மற்றவர்களிடம் மக்கள் நீதிமன்றம் குறித்து தெரிவிக்க வேண்டும். சமரச தீர்வை எதிர்நோக்குவோர் மக்கள் நீதிமன்றங்களை நாடி தீர்வு பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன இழப்பீடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், ஜீவானாம்ச வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமரசமாக போகக்கூடிய வழக்குகள் என 2 ஆயிரத்து 300 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 1,263 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 74 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ராஜேந்திரன், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான கோவிந்தராஜன், சார்பு நீதிபதி சண்முகவேல், குற்றவியல் நீதித்துறை நீதிபதி குமார், உரிமையியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story