டயரை தூக்கும்போது கயிறு அறுந்தது அரசு பஸ்சின் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சாவு


டயரை தூக்கும்போது கயிறு அறுந்தது அரசு பஸ்சின் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த ஊழியர் சாவு
x
தினத்தந்தி 11 March 2019 4:15 AM IST (Updated: 11 March 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

டயரை தூக்கும் போது கயிறு அறுந்ததால் பஸ்சின் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கோவை,

கோவை மாவட்டம் காரமடை சேரன்காலனியை சேர்ந்தவர் கணபதி (வயது 52). இவர் உக்கடம் அரசு பஸ் டெப்போவில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை டெப்போவில் ஊழியர்கள் 6 பேர் பஸ்களின் மேற்கூரையில் மாற்று டயர்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக டயர்களில் கயிறு கட்டி பஸ்சின் மேற்கூரைக்கு தூக்கினர். கணபதியும், அவருடன் 2 ஊழியர்களும் பஸ்சின் மேற்கூரை மீது நின்று கொண்டு டயரை மேலே இழுத்து தூக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்தது. இதனால் நிலைதடுமாறிய கணபதி பஸ்சின் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அலறி துடித்தார்.

இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கணபதியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் உக்கடம் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

பலியான கணபதி தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்தவர். பஸ்களின் மேற்கூரைக்கு கிரேன் மூலமாகவே டயர்களை ஏற்ற வேண்டும். ஆனால் டெப்போவில் கிரேன் இல்லாததே கணபதி உயிரிழப்புக்கு காரணம். மேலும், பஸ்சின் மேற்கூரைக்கு டயரை ஏற்றுவதற்காக பயன்படுத்தப்பட்டது பழைய கயிறு என்றும், அதனால் தான்அந்த கயிறு அறுந்து விட்டதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.கணபதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story