சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி இருவர் படுகாயம்


சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலி இருவர் படுகாயம்
x
தினத்தந்தி 11 March 2019 4:30 AM IST (Updated: 11 March 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

பாடாலூர் அருகே சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாடாலூர்,

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவாறு உள்ளனர். இதே போல் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த கலியன்(வயது 60), மகேஸ்வரி (50), காவேரி (55), சோலையம்மாள்(70), மருதாம்பாள்(60) உள்பட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை சிறுவாச்சூரில் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்றனர்.

அவர்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் ஆஞ்சநேயர் மலை அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் கார் மோதியதில் கலியன், மகேஸ்வரி, காவேரி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சோலையம்மாள், மருதாம்பாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் கார் டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த சோலையம்மாளையும், மருதாம்பாளையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story