விளாத்திகுளம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் உள்பட 3 பேர் பலி
விளாத்திகுளம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த புதூர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் உள்ள பாண்டி முனியசாமி கோவிலில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 11 மணிக்கு லோடு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி ஓட்டினார். முத்துசாமிபுரம் மற்றும் சென்னமரெட்டிபட்டி இடையே லோடு ஆட்டோ சென்று கொண்டு இருந்தது.
அப்போது சென்னமரெட்டிபட்டியை சேர்ந்த சண்முகலட்சுமி (வயது 70) என்பவர் சாலையில் துவரை செடிகளை போட்டு கொண்டு இருந்தார். அவர் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக டிரைவர் பழனிச்சாமி ஆட்டோவை திருப்பினார். ஆனால் லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி அங்கு இருந்த இரும்பு தடுப்பில் மோதி சாலையில் சண்முகலட்சுமி மீது கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லோடு ஆட்டோவில் இருந்த முத்துசாமிபுரத்தை சேர்ந்த ராமசாமி மனைவி ராமலட்சுமி (வயது 50), செண்பகம் (50) மற்றும் சாலையில் நின்று கொண்டு இருந்த சண்முகலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். பலருக்கு காயங்கள் ஏற்பட்டன.
இதுகுறித்து புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்த டிரைவர் உள்பட 14 பேரை சிகிச்சைக்காக அருப்புகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிர் இழந்த 3 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்து குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story