அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.80 லட்சத்தில் நவீன பிரசவ அறை திறப்பு
நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அதிநவீன பிரசவ அறை திறக்கப்பட்டது.
வண்டலூர்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை மற்றும் சமுதாய பொறுப்புகள் திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம் கிராமத்தில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ‘‘மகிழினி’’ அதிநவீன பிரசவ அறை மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பில் பிரசவ உபகரணங்கள் அதி நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட அதிநவீன பிரசவ அறை திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பியூலா ராஜேஷ் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட ‘மகிழினி’ அதிநவீன பிரசவ அறையை திறந்துவைத்தார். இதனையடுத்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நலப்பெட்டகத்தையும் வழங்கினார். பின்னர் புதிதாக திறக்கப்பட்ட அதிநவீன பிரசவ அறையை பார்வையிட்டார்.
விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பியூலா ராஜேஷ் பேசியதாவது:–
நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகிழினி என்ற பெயரில் நவீன பிரசவ அறை திறக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது திறக்கப்பட்ட பிரசவ அறை எப்படி தூய்மையாக இருக்கிறதோ? இதேபோன்று டாக்டர்கள், ஊழியர்கள் எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவமனையை டாக்டர்கள் அவர்கள் வசிக்கும் இன்னொரு வீடாக நினைத்து பராமரித்தால் எப்போதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தூய்மையாக காணப்படும். இன்னும் 5 ஆண்டுகள் கழித்து வந்து பார்க்கும்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரசவ அறை இன்றைக்கு தூய்மையாக எப்படி இருக்கிறதோ? இதேபோல எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது மருத்துவர்களின் கடமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, கூடுதல் இயக்குநர் டாக்டர் தாமரைச்செல்வி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் பழனி, டாக்டர் செந்தில்குமார், வட்டார மருத்துவர் வெங்கடேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சபாபதி மற்றும் பொது சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.