ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காட்சி


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காட்சி
x
தினத்தந்தி 10 March 2019 10:30 PM GMT (Updated: 10 March 2019 8:09 PM GMT)

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காட்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கண்காட்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மேற்பார்வையாளர்கள் வளர்மதி, வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் கவியரசி வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் கீரைவகைகள், பழங்கள், காய்கறி மற்றும் பாரம்பரிய தானியங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் வளர்ச்சிக்கு ஏற்ற உயரம் இல்லாத குழந்தைகள், எடை குறைவாக உள்ள குழந்தைகள், உயரத்திற்கு ஏற்ற எடை இன்மை, ரத்தசோகை உள்ள குழந்தைகள் ஆகியவற்றிற்கு எவ்வாறு ஊட்டச்சத்து அளிப்பது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊர்வலம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி திருச்சி சாலை, அண்ணாசாலை வழியாக மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலம் மற்றும் கண்காட்சியில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவியாளர் சரவணன் நன்றி கூறினார்.

இதேபோல் தா.பழூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கண்காட்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சாபிகேசன், வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் தனம், தமயந்தி, மெய்யம்மை வட்டார ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம், வட்டார திட்ட உதவியாளர் கார்த்திக்கேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story