நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பேச்சு


நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி பேச்சு
x
தினத்தந்தி 11 March 2019 4:45 AM IST (Updated: 11 March 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பா.ம.க. பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரங்கசாமி நேற்று காலை உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணிக்காக தமிழக முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சரை ஆகியோரை சந்தித்து பேசியபோது, முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்கின்றோம், 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக புதுவை தொகுதியை உங்களுக்கு தருகின்றோம். உங்கள் கட்சி வேட்பாளர் வெற்றிக்காக அ.தி.மு.க.வினர் நன்றாக உழைப்பார்கள். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி இயற்கையாகவே அமைந்த கூட்டணி. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலை சந்தித்த போது அ.தி.மு.க.வுடன்தான் முதன் முதலில் கூட்டணி வைத்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறிய இடைவெளி வந்துவிட்டது. அதற்கு தேர்தல் இறுதி நேரத்தில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச முடியாததுதான் காரணம். அதனால் தனித்தனியாக போட்டியிட்டோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் இணைந்து போட்டியிட்டு இருந்தால் எவ்வளவோ வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றிருக்கலாம். இணைந்து போட்டியிடாததால் மக்களுக்கு விரோதமானவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். தற்போது ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் அனைவரும் பேச தொடங்கி விட்டனர். அதற்காக நாம் இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் இந்த தேர்தல் புதுவையில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

நமது கூட்டணி பலமான கூட்டணியாக அமைந்துள்ளது. பா.ஜ.க., பா.ம.க. மற்றும் பல்வேறு கட்சிகள் நம்முடன் உள்ளனர். அவர்களும் நமக்காக ஓட்டு கேட்கும்போது நமக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். தமிழக முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் கூறியதுபோல் முழுமையான வெற்றிக்கு பாடுபட வேண்டும். இந்த தேர்தலுக்கு பின்னர் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வரும். புதுவை தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி கொடுத்தற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

புதுச்சேரியில் அ.தி.மு.க. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வந்துள்ளது. தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசி, புதுவை தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன் பேரில் புதுவை தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி முடிவு ஆனாலும் எந்த தொகுதி யாருக்கு என்று முடிவு ஆகவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் இந்த கூட்டணி முதன்மையாக வெற்றியை பெறும்.

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறுகிறார். இந்த கூட்டணி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கு முன்பு காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான், நீ என இடம் கேட்டனர். தற்போது எதிரணியில் வலுவான கூட்டணி என்பதால் போட்டியிட பயப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் யாரும் தேர்தலில் போட்டியிட முன்வராததால் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியை சந்தித்து அவரது மகனை நிறுத்த கேட்கின்றனர். நமது வெற்றி 100 சதவீத உறுதி செய்யப்பட்டது.

கடந்த 3 ஆண்டு காலத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்த காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையும் தடுத்த நிறுத்தி வைத்துள்ளார். காங்கிரஸ் அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அனைத்து திட்டமும் கிடப்பில் உள்ளதால் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. உப்பளம் தொகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில இணைச் செயலாளர் மகாதேவி, மாநில கழக துணைச் செயலாளர்கள் பெரியசாமி, கணேசன், நாகமணி, நகர செயலாளர் அன்பானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story