என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களை பற்றிய சிந்தனை வரும் அமைச்சர் நமச்சிவாயம் தாக்கு
என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களை பற்றிய சிந்தனை வரும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரி,
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீதும் கூட்டணி கட்சிகளின் மீதும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருக்கு மக்களை பற்றிய சிந்தனை வரும். மற்ற நேரங்களில் மக்களை பற்றி சிந்திக்கமாட்டார். மக்கள் கொடுத்த பதவியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்காக செயல்பட்டதில்லை.
சட்டசபை கூட்டம் தொடங்கிய உடன் எதிர்ப்பை மட்டும் தெரிவித்து 5 நிமிடத்தில் வெளிநடப்பு செய்து விடுவார். அசாதாரண சூழலில் கூட அரசு எப்படி செயல்பட வேண்டும் என ஆலோசனை கூறவில்லை. சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசியதில்லை. பொறுப்பான எதிர்க்கட்சி போல் செயல்படவில்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக ஆளும் காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வாரி இரைத்து வருகிறார். இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
புதுச்சேரி மக்கள் அரசியல் அறிவு உள்ளவர்கள். அவர்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் வருகின்றனர். அவர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். வருகிற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, பிரசாரம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்துபேசி வருகிறோம்.
புதுவை மாநில காங்கிரஸ் அரசின் சாதனைகளையும், மத்திய பா.ஜ.க. அரசின் வேதனைகளையும் மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிப்போம். நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி யாரை வேட்பாளராக அறிவிக்கின்றாரோ, அவரது வெற்றிக்கு பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.