கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் மரணம் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் மரணம் அடைந்துள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் மரணம் அடைந்துள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
குரங்கு காய்ச்சல்
போலியோ சொட்டு மருந்து முகாம் கர்நாடகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குரங்கு காய்ச்சல் மூலம் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மனிதநேய அடிப்படையில் நிவாரண உதவி வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்த சம்பவங்கள் விசேஷமானவை என்று கருத வேண்டிய அவசியம் உள்ளது.
நிவாரண உதவி
மலைநாடு பகுதிகளில் குரங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் அரசு இந்த ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த குரங்கு காய்ச்சலுக்கு நிவாரணம் வழங்கினால், பன்றி காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும். மலைநாடு பகுதிகளில் சில பிரச்சினைகள் உள்ளன.
ரூ.10 கோடி நிதி
இந்த பிரச்சினைகளை ஆய்வு செய்து, அவற்றுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கு காய்ச்சலை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆயினும் மாநில அரசு, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு மாநில அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஆய்வு கூடம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அடுத்த ஆண்டு 4½ லட்சம் போலியோ சொட்டு மருந்து தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருந்து பற்றாக்குறை இல்லை
இந்த சொட்டு மருந்து நிரந்தரமாக தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து பற்றாக்குறை எதுவும் இல்லை. குரங்கு காய்ச்சலுக்கு கர்நாடகத்தில் குறிப்பாக சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் 8 பேரும், தீர்த்தஹள்ளி தாலுகாவில் 2 பேரும் என மொத்தம் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்னும் சில பேர் குரங்கு காய்ச்சலால் இறந்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 1,762 பேரின் ரத்த மாதிரி எடுத்து ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
60 ஆயிரம் பேருக்கு...
இதில் 272 பேருக்கு அந்த காய்ச்சல் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 184 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குரங்கு காய்ச்சலுக்கு மக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை.
மே மாதம் வரை இந்த குரங்கு காய்ச்சல் நீடிக்கும். இதுவரை 60 ஆயிரம் பேருக்கு நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மாதம் 2 முறை சொட்டு மருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். 6 மாதங்களுக்குள் ஊக்க சொட்டு மருந்து பெற்றுக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story