ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி குரங்கணி தீ விபத்தில் இறந்தவர்களுக்கு துணை முதல்-அமைச்சர் அஞ்சலி
குரங்கணி தீ விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சம்பவத்தில் தீ கருகி இறந்தவர்களுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.
போடி,
போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சியாக கொழுக்குமலைக்கு சென்னை, ஈரோடு பகுதியை சேர்ந்த 39 பேர் சுற்றுலாவாக வந்தனர். அவர்களில் காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தேனி மாவட்ட வனத்துறை சார்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குரங்கணியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஒத்தை மரம் நோக்கி அமைக்கப்பட்டிருந்த நினைவு கல்லில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து காட்டுத் தீ சம்பவங்களை தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 30 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பகுதியில் முதல் கட்டமாக 23 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. இதில் மரக்கன்று ஒன்றை துணை முதல்-அமைச்சர் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வன வளத்தை காக்கவும், வனப்பகுதியில் தீ பிடிப்பதை தடுக்கவும் துணை முதல்-அமைச்சர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரன், மாவட்ட வன அலுவலர் கவுதமன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், பார்த்திபன் எம்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சையதுகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story