கழிவுநீர் வாருகால் அமைக்க கோரி சாலை மறியல்


கழிவுநீர் வாருகால் அமைக்க கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 10 March 2019 10:15 PM GMT (Updated: 10 March 2019 9:58 PM GMT)

திருப்பத்தூர் சீதளிவடகரைப் பகுதி மக்கள் கழிவுநீர் வாருகால் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் என்.புதூர் விலக்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நகரப் பகுதி வழியாக சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணி சீதளிவடகரைப் பகுதியில் மேற்கொள்ளும் போது, அந்த பகுதி மக்கள் கழிவுநீர் வாருகால் அமைத்து சாலையை அமைக்கும்படி பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் மனு அளித்தனர்.

ஆனால் அதிகாரிகள் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்தநிலையில் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, அந்த பகுதி பொதுமக்கள் சாலையின் சற்று தூரத்திற்கு முன்பாக தடைகளை ஏற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமமடைந்தனர்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், மரியசெல்வம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதனால் மறியலை கைவிடும்படி கூறினர்.

இதையடுத்த மறியல் கைவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை துணைப் பொறியாளர் துரை பொதுமக்களிடம் கழிவுநீர் வாருகால் அமைக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூர்–திண்டுக்கல் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story