எடப்பாடி பழனிசாமி வாய் அசைத்தால் வரலாறு; நாவசைத்தால் புறநானூறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


எடப்பாடி பழனிசாமி வாய் அசைத்தால் வரலாறு; நாவசைத்தால் புறநானூறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 10 March 2019 11:00 PM GMT (Updated: 10 March 2019 10:14 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் அசைத்தால் வரலாறு, நாவசைத்தால் அது புறநானூறு என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

சாத்தூர்,

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக அரசா, கவர்னரா என்று வைகோ கேட்கிறார்.

ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி 7 பேருக்கும் அ.தி.மு.க. அரசால் மட்டுமே விடுதலை வாங்கித் தர முடியும். வைகோ தற்போது ஒரு சூழ்நிலை கைதியாக உள்ளார். எனவே தான் அவர் தி.மு.க.வை உயர்த்தி பேசி வருகிறார்.

தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிரச்சினைக்குரியவர்களாக இருப்பதால் அந்த கூட்டணியே பிரச்சினைக்குரிய கூட்டணிதான். ஏழை, எளிய மக்கள் எல்லா பலனும் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடங்கப்பட்ட கூட்டணி தான் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி

மக்கள் நீதி மய்யம் தேர்தல் களத்திலேயே கிடையாது. தேர்தல் களத்தில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி மட்டும் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி வாய் அசைத்தால் வரலாறு. நாவசைத்தால் அது புறநானூறு. இது தான் விதி. தினகரன் கட்சி மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. பிரிந்தவர்கள் தற்போது அ.தி.மு.க.வில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதில் எங்களுக்கு ஆட்சேபனையே கிடையாது. சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் எங்களுக்கு பெண் என்ற முறையில் மகிழ்ச்சிதான்.

சாத்தூர் நெடுஞ்சாலையில் படந்தால் பிரிவில் பாலம் கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். சாத்தூர் தொகுதிக்கு எம்.எல்.ஏ. இல்லை என்ற கவலை வேண்டாம். நான் தான் தொகுதி எம்.எல்.ஏ., மந்திரி. 40 நாடாளுமன்ற தொகுதி, 21 சட்ட மன்ற தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

கடவுள் என்னும் முதலாளி கண்டு எடுத்த தொழிலாளி எடப்பாடி பழனிசாமி. அவர் சொன்னால் சொன்னது தான். அவர் ஒரு தடவை சொன்னால் அது நூறு தடவை சொன்ன மாதிரி. எங்கள் கூட்டணி மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி. இவ்வாறு கூறினார்.

Next Story