பார்வையாளர்களை கவர்ந்த கிளிமூக்கு-விசிறிவால் சேவல் கண்காட்சி


பார்வையாளர்களை கவர்ந்த கிளிமூக்கு-விசிறிவால் சேவல் கண்காட்சி
x
தினத்தந்தி 11 March 2019 4:15 AM IST (Updated: 11 March 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கிளிமூக்கு-விசிறி வால் சேவல் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் குட்டியபட்டியில், 5-வது ஆண்டாக கிளிமூக்கு-விசிறி வால் சேவல் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, ஈரோடு, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சேவல்கள் கண்காட்சியில் பங்கேற்றன.

இதேபோல் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சேவல்கள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் பொன்னிறம், மயில், நூலான், கீரி, கருங்கீரி என 18 வகையான 350 சேவல்கள் இடம்பெற்றன.

அலகு, வால் ஆகியவற்றின் வடிவம், சேவலின் உயரம், அழகு, கம்பீரம் ஆகியவற்றின் அடிப்படையில் 100 சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு பித்தளை அண்டா பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் அவற்றில் சிறந்த 30 சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒருஜோடிகளுக்கு பித்தளை குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதில் பொன்னிறம் வகையை சேர்ந்த ஒரு சேவல், 2 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளித்தது. அந்த சேவலை ஒருவர் ரூ.3 லட்சம் வரை விலை கூறியும் உரிமையாளர் விற்பனை செய்ய மறுத்து விட்டார். இதேபோல் மற்றொரு சேவல் 1¾ அடி உயரத்தில் இருந்தது. அதை ரூ.2 லட்சத்துக்கு கேட்டும் உரிமையாளர் விற்கவில்லை. அதேநேரம் கிளிமூக்கு-விசிறி வால் வகை கோழிகள், குஞ்சுகளையும் சிலர் விற்க கொண்டு வந்து இருந்தனர்.

ஒருசிலர் ரூ.5 ஆயிரத்துக்கு கோழிக்குஞ்சுகளை வாங்கி சென்றனர். மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் குவைத்தில் இருந்தும் சேவல் கண்காட்சியை பார்க்க பலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் கண்காட்சி ஈர்த்தது. கண்காட்சியையொட்டி சேவல் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாத், நெல்சன், சித்திக் ஆகியோர் செய்து இருந்தனர். 

Next Story